பெருந்துறை சிப்காட் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து


பெருந்துறை சிப்காட் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 29 May 2020 12:17 PM IST (Updated: 29 May 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னிமலை,

பெருந்துறை அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களும், மிகவும் குறைந்த உற்பத்தி திறனுடனும் அனைத்துத் தொழிற்சாலைகளும் இயங்கி வந்தது.

இந்த நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நூல் பண்டல்களில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீ அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல் பண்டல்கள், எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story