கடலூர் மாவட்டத்தில் பெண் டாக்டர், என்ஜினீயர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா


கடலூர் மாவட்டத்தில் பெண் டாக்டர், என்ஜினீயர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Jun 2020 9:48 AM IST (Updated: 1 Jun 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பயிற்சி பெண் டாக்டர் மற்றும் என்ஜினீயர் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 458 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. பின்னர் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 24 வயது பயிற்சி பெண் டாக்டருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் மும்பையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து திரும்பி வந்த கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகரை சேர்ந்த 45 வயது என்ஜினீயருக்கும் கொரோனா உறுதியானது. வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்த அவரை சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் பத்மாவதி நகரில் உள்ள என்ஜினீயர் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை வருவாய் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் பிரதான சாலை, தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

இதுதவிர மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பி வந்த விருத்தாசலம் வட்டம் கோ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், மங்களூர் வட்டம் பனையந்தூர் கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தை சேர்ந்த 55 வயது ஆணுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 5 பேரையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 453-ல் இருந்து 458 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா உறுதியாகி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். இதுதவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட 36 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 26 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 7 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர், சென்னை தனியார் மருத்துவமனையில் தலா ஒருவரும், வீட்டில் ஒருவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 629 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 458 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

Next Story