தடைக்காலம் முடிந்த நிலையில் 50 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தடைக்காலம் முடிந்த நிலையில் 50 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 6 Jun 2020 5:19 AM IST (Updated: 6 Jun 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் முடிந்த நிலையில் 50 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.


புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படகுகள் சீரமைக்கப்படாதது, ஊரடங்கு மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வரமாட்டார்கள் என்பதால் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் சில மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை 170 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 2,400 என்ஜின் பொருத்திய பைபர் படகுகளும் உள்ளன.

ஆனால் நேற்று பூஜை போட்டு 50 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) கரைக்கு திரும்புகின்றனர். மேலும் சுமார் 30 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளன. படிப்படியாக நாள்தோறும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் பிடித்து வரும் மீன்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்க வசதியாக மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

வியாபாரிகளை தவிர பொதுமக்கள் யாரும் அங்கு வந்து மீன் வாங்க அனுமதி இல்லை. பொதுமக்கள் அருகில் உள்ள மீன் அங்காடிகளில் மீன் வாங்கிக் கொள்ளலாம் என்று மீன்வளத் துறை அறிவித்துள்ளது. துறைமுகப் பகுதிக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story