வேலூரில் சிகிச்சை பெற்று வந்த செய்யாறு மூதாட்டி பலி


வேலூரில் சிகிச்சை பெற்று வந்த செய்யாறு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 8 Jun 2020 10:47 AM IST (Updated: 8 Jun 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சிகிச்சை பெற்று வந்த செய்யாறு மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.


செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் 68 வயது மூதாட்டி. இவர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என சளிமாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து அவரது உடல் செய்யாறு கொண்டு செல்லப்பட்டு அரசு வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி செய்யாறு டவுன் டி.எஸ்.பழனிவேல் தெருவில் உள்ள முஸ்லிம் வக்போர்டு மயானத்தில் மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே சென்னை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர், ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூதாட்டியும் இறந்ததால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெருங்கட்டூரை சேர்ந்த 20 வயது பெண், அக்கூரை சேர்ந்த ஆண், பெண் என 2 பேர், காட்டம்பூண்டியைச் சேர்ந்த 40 வயது பெண், மங்கலத்தைச் சேர்ந்த 29 வயது பெண், தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், திருவண்ணாமலை நகராட்சியைச் சேர்ந்த 31 வயது ஆண் ஆகியோர் அடங்குவர்.

அவர்களில் ஒருவர் சென்னையில் இருந்தும், ஒருவர் திருப்பூரில் இருந்தும், ஒருவர் விழுப்புரத்தில் இருந்தும், 2 பேர் டெல்லியில் இருந்தும், ஒருவர் ஆந்திராவில் இருந்தும் வந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 26 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 26 ஆயிரத்து 167 பேருக்கு பரிசோதனை முடிவு பெறப்பட்டுள்ளது. 297 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது. அதில் 493 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 141 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 16 பேர் பிற மாவட்டத்தையும், 186 பேர் சென்னையில் இருந்தும், 111 பேர் மும்பையில் இருந்தும், 39 பேர் பிற மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.

Next Story