தேன்கனிக்கோட்டை அருகே கிராமமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானை


தேன்கனிக்கோட்டை அருகே கிராமமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானை
x
தினத்தந்தி 10 Jun 2020 1:28 AM GMT (Updated: 2020-06-10T06:58:54+05:30)

தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை டிரோன் கேமரா மூலம் கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு காட்டுயானை கடந்த மாதம் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் திம்மராயப்பா (வயது 70) என்ற விவசாயியை மிதித்து கொன்றது. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னபூதகோட்டை கிராமத்தில் விவசாயி சென்னப்பா (55) என்பவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.

தின்னூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடப்பா (55) என்பவர் ஒற்றை காட்டுயானை தாக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து 2 விவசாயிகளை தாக்கி கொன்ற காட்டுயானை தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதி ஒட்டியுள்ள திம்மசந்திரம், ஜார்கலட்டி, கலகோபசந்திரம் ஆகிய கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கிராமமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானையின் நடமாட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி பிரபு மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனத்துறை கால்நடை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை பின்தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து விரட்டியடித்தனர். அப்போது அந்த யானை ஆக்ரோஷத்தில் வனத்துறை ஊழியர்களை விரட்டியது. இதனால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து யானையை விரட்டியடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு, பகலாக தீவிரமாக விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுயானை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் கிராமப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விவசாய தோட்டங்களில் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். வனப்பகுதியின் அருகில் கிராமமக்கள் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆக்ரோஷத்தில் மனிதர்களை தாக்கி வரும் இந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து நீலகிரி பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story