ஈரடுக்கு மேம்பாலம், மேட்டூர் அணை திறப்பு ; எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை


ஈரடுக்கு மேம்பாலம், மேட்டூர் அணை திறப்பு ; எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை
x
தினத்தந்தி 10 Jun 2020 8:42 AM IST (Updated: 10 Jun 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம், மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகிறார்.

சேலம்,

சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் 5 ரோட்டை மையமாக கொண்டு நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) ஈரடுக்கு மேம்பாலத்தை திறக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இதற்காக அவர் இன்று (புதன்கிழமை) மாலை சென்னையில் இருந்து கார் மூலம் சேலத்துக்கு வருகிறார். மாவட்ட எல்லையான தலைவாசலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேட்டூருக்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். இதையடுத்து 13-ந் தேதி அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் 14-ந் தேதி கார் மூலம் அவர் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story