பெங்களூருவில் தம்பதி கொலை வழக்கில் தலைமறைவு: மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மகன் கைது


பெங்களூருவில் தம்பதி கொலை வழக்கில் தலைமறைவு: மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மகன் கைது
x
தினத்தந்தி 12 Jun 2020 5:46 AM IST (Updated: 12 Jun 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மகன், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணப்பிரச்சினையில் அவர் தனது பெற்றோரை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுராவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் நரசிம்மராஜு (வயது 70). இவரது மனைவி சரஸ்வதி (64). இந்த தம்பதிக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சந்தோசுக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் நரசிம்மராஜு, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள். அந்த தம்பதி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

அந்த தம்பதியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள்? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பெற்றோர் கொலையான பின்பு சந்தோஷ் வீட்டுக்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தோஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரே தனது தந்தை, தாயை மூச்சு திணறடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாகி விட்ட சந்தோசை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவில் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். ஸ்ரீரங்கபட்டணா போலீசார், அந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேம்பாலத்தில் இருந்து விழுந்ததால், அவரது கால்கள் முறிந்தும், கை, தலையிலும் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் காமாட்சி பாளையாவை சேர்ந்த சந்தோஷ் என்பதும், ஆடிட்டர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் தந்தை, தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுபற்றி காமாட்சி பாளையா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சந்தோசை கைது செய்தார்கள்.

தற்கொலைக்கு முயன்றதில் சந்தோசுக்கு பலத்தகாயம் ஏற்பட்டு இருப்பதால், அவர் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பணப்பிரச்சினையில் தந்தை, தாயை அவர் தீர்த்து கட்டியது தெரியவந்தது. அதாவது சந்தோஷ் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.20 லட்சத்திற்கு வீடு வாங்கி இருந்தார். இதற்காக சிலரிடம் அவர் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக சந்தோசுக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல, 9-ந் தேதி இரவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கிய தந்தை, தாயை மூச்சு திணறடித்து சந்தோஷ் கொலை செய்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத் தெரிவித்துள்ளார். சந்தோஷ் குணமடைந்ததும், அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சந்தோஷ் மீது காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story