பரிசோதனை அதிகரிப்பு சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி


பரிசோதனை அதிகரிப்பு சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2020 5:20 AM IST (Updated: 13 Jun 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு பாதிப்பு இருக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ முறைப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 130 நபர்களில் 30 பேர் பூரண குணமடைந்தனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சித்த மருத்துவ முறையில் சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு பக்கம் அலோபதி மருத்துவர்கள், இன்னொரு பக்கம் சித்த மருத்துவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிமுறைகளை பின்பற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

கூடுதல் ஆம்புலன்சுகள்

சென்னையில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், தற்போது 5 ஆயிரத்து 210 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லை. தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய சவாலான மண்டலங்களில் மக்கள் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக கூடுதலாக 50 ஆம்புலன்சு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு இருக்கும்

கொரோனா மையங்களில் 17 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. அங்கு மேலும் படுக்கை வசதிகள் அதிகரிப்பதற்கும், மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அடுத்த 2 வாரங்களுக்கு பாதிப்பு அதிகமாக தான் வரும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்

பரிசோதனை மேற்கொண்டாலே வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது நோய் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒருவர் பரிசோதனை செய்தவுடன் அவர் முடிவு வரும் வரை வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். அதேபோல் பரிசோதனை முடிவில் தொற்று இல்லாமல் அறிகுறி இருந்தாலும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மத்திய வட்டார துணை கமிஷனர் ஸ்ரீதர், சித்த மருத்துவர் வீரபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story