அரியலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட இருவர் பாதிப்பு


அரியலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட இருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 4:30 AM IST (Updated: 17 Jun 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்,

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டம், பொய்யூரில் 26 வயதுடைய ஒரு வாலிபருக்கும், காட்டாத்தூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கும், கோவில் எசனையை சேர்ந்த 56 வயதுடைய ஒரு ஆணிற்கும், இடையக்குறிச்சியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் என 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 397 ஆக உயர்ந்துள்ளது. இதில் 375 பேர் குணமடை வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குணமடைந்த 141 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது.

2 பேர்

இதேபோல் பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 23 வயது கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி இவரது தாய் விசாகப்பட்டினம் சென்றுவிட்டு கடந்த மே மாதம் 22-ந் தேதி ஊருக்கு திரும்பி வந்தார். அவர் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இரு பெண்களும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் எவ்வித அறிகுறியும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

Next Story