பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 62 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்


பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 62 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 16 Jun 2020 10:30 PM GMT (Updated: 16 Jun 2020 6:52 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 62 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் முதல்- அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலத்தில் குற்ற புலனாய்வுத்துறைக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தையும், பெரம்பலூர் ஆலத்தூர் வட்டத்தில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தா குத்துவிளக்கேற்றி, கட்டிடத்தை பார்வையிட்டார். திறந்து வைக்கப்பட்ட குற்ற புலனாய்வுத்துறைக்கு கட்டப்பட்ட கட்டிடம் தரைதளம் 152.27 சதுர மீட்டரில் போர்டிகோ, கணினி அறை, ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, பதிவறை மற்றும் கைதி அறை மற்றும் கழிவறைகளுடனும், முதல் தளம் 132.45 சதுர மீட்டரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கூட்ட அரங்கு, தகவல் அறைகளுடன் மொத்தம் 309.77 சதுர மீட்டரில் ரூ.89.19 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் 292.50 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள சார்நிலை கருவூல அலுவலகமானது தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.72.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், திருச்சி சரக கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சக்திவேல், மாவட்ட கருவூல அலுவலர்பார்வதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story