பெங்களூருவில் பி.யூ. கல்லூரி தேர்வு எழுதிய மாணவர், மாணவிக்கு கொரோனா - அரசுக்கு புதிய தலைவலி


பெங்களூருவில் பி.யூ. கல்லூரி தேர்வு எழுதிய மாணவர், மாணவிக்கு கொரோனா - அரசுக்கு புதிய தலைவலி
x
தினத்தந்தி 20 Jun 2020 12:02 AM GMT (Updated: 20 Jun 2020 12:02 AM GMT)

பெங்களூருவில் பி.யூ. கல்லூரி தேர்வு எழுதிய ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மாநில அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான கடைசி தேர்வான ஆங்கில பாடத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மாதங்கள் கழித்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட பி.யூ. கல்லூரி ஆங்கில பாடத்தேர்வு ஜூன் மாதம் 18-ந் தேதி(நேற்று முன்தினம்) நடத்தப்படும் என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதற்காக ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன.

தனி அறைகளில்...

கொரோனா பீதி காரணமாக தேர்வு மையங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வு எழுத வைக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் வெப்பநிலை அதிகம் இருந்த மாணவர்களையும், கொரோனா பரவலால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து தேர்வு எழுத வந்த மாணவர்களையும் தனி அறைகளில் அமர வைத்து ஆசிரியர்கள் தேர்வு எழுத வைத்தனர்.

தேர்வு நேரத்தில் சமூக இடைவெளி காற்றில் பறந்து போனது என்றே சொல்லலாம். ஏனெனில் தேர்வு நேரத்திலும், தேர்வு முடிந்த பின்பும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறந்தனர்.

அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில் பி.யூ. கல்லூரி தேர்வை எழுதிய ஒரு மாணவருக்கும், மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக்கை சேர்ந்த அந்த மாணவி ஏற்கனவே வீட்டு தனிமையில் இருந்து வந்துள்ளார். அவருடைய கையிலும் வீட்டு தனிமையில் இருப்பதற்கான சீல் குத்தப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அவர் அந்த சீலை அழித்துவிட்டு தேர்வு எழுத வந்துள்ளார்.

தேர்வு மையத்தில் அவருடைய உடல்வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் ஆசிரியர்கள் பரிசோதித்து உள்ளனர். அப்போது அந்த மாணவிக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவியை தனி அறையில் அமர வைத்து ஆசிரியர்கள் தேர்வு எழுத வைத்தனர்.

கொரோனா பரிசோதனை

பின்னர் அந்த மாணவி தனது வீட்டிற்கு வந்துவிட்டார். முன்னதாக அவர் வீட்டு தனிமையில் இருந்தபோது அவருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்திருந்தனர். அதன் அறிக்கை நேற்று டாக்டர்களுக்கு கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாணவியை விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் அவருடன் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதிய 14 மாணவ-மாணவிகள், அந்த அறையின் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர், தேர்வுக்கு முன்பும், பின்பும் அந்த மாணவியை சந்தித்தவர்கள், அவருடைய குடும்பத்தினர் ஆகியோரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுக்கு புதிய தலைவலி

அதேபோல் பெங்களூரு சோமேஸ்வரா காலனியில் வசிக்கும் ஒரு பி.யூ. கல்லூரி மாணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் நேற்று முன்தினம் நடந்த ஆங்கில பாடத்தேர்வை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பி.யூ. கல்லூரி தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம் என்று அரசு நினைத்திருந்த நிலையில் தற்போடு தேர்வு எழுதிய ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story