பெண்ணாடம் அருகே, விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


பெண்ணாடம் அருகே, விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jun 2020 3:45 AM IST (Updated: 21 Jun 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் மண்எண்ணெய் மானிய விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடையின் விற்பனையாளர் கடந்த சில நாட்களாக கடையை திறக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரேஷன் கடையை திறப்பதற்காக விற்பனையாளர் வந்துள்ளார். இதைபார்த்த பொதுமக்கள் ஏன் நீண்ட நாட்களாக கடையை திறக்கவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல், அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விற்பனையாளரை மாற்றக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி அறிந்த சிறுமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கடைக்கு விற்பனையாளர் சரியாக வருவதில்லை. இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து கடை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story