ஒரேநாளில் 5 பேருக்கு தொற்று உறுதி: ஈரோட்டில் கொரோனாவுக்கு பெண் பலி - மாவட்டத்தில் பாதிப்பு 87 ஆக உயர்வு


ஒரேநாளில் 5 பேருக்கு தொற்று உறுதி: ஈரோட்டில் கொரோனாவுக்கு பெண் பலி - மாவட்டத்தில் பாதிப்பு 87 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 Jun 2020 11:42 AM IST (Updated: 24 Jun 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரேநாளில் 5 பேருக்கு தொற்று உறுதியானது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைவிரித்து உள்ளது. தினசரி பாதிப்பு கண்டறியும் மாவட்டங்கள் வரிசையில் ஈரோடும் வந்து உள்ளது. நேற்று முன்தினம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக இருந்தது.

அதில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரது பெயர் ஈரோடு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டது. எனவே மொத்த பாதிப்பு 82 ஆக இருந்தது.

நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 56 வயது பெண்ணும், 36 வயது ஆணும் என 2 பேர் ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 28 வயது ஆணும், 3 வயது ஆண் குழந்தையும் என 2 பேர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்கள். 37 வயது ஆண் ஒருவர் கோபியை சேர்ந்தவர்.

இதில் 3 பேர் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். 2 பேர் ஏற்கனவே பாதிப்பு அடைந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் 5 பேருடன் சேர்த்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்து உள்ளது.

முதல் கட்டமாக கொரோனா தொற்று ஏற்பட்ட போது பெருந்துறையை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தார். அதன் பின்னர் எந்த மரணமும் இன்றி அனைவரும் முற்றிலும் குணம் அடைந்தனர்.

2-வது கட்டமாக தற்போது பாதிப்பு தொடங்கியதில் இருந்து யாருக்கும் பெரிய அளவிலான உடல் உபாதைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக ஈரோடு வளையக்கார வீதி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் நேற்று கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.

இவரது மருமகள் (கார் டிரைவரின் மனைவி) கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாமியாருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்தது. ஆனால், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் என்பதால் அவரையும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் 38 வயது பெண்ணுக்கு உடல்நிலை பாதிப்பு அடைந்தது. காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக சிரமப்பட்டார். எனவே மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். அவரது கொரோனா பரிசோதனை முடிவு வைரஸ் தொற்றை உறுதி செய்து இருக்கிறது. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story