சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்புக்கான பாக்கி தொகையை கேட்டு 7-ந் தேதி விவசாயிகள் போராட்டம்


சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்புக்கான பாக்கி தொகையை கேட்டு 7-ந் தேதி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2020 10:50 PM GMT (Updated: 25 Jun 2020 10:50 PM GMT)

பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்புக்கான பாக்கி தொகை ரூ.8 கோடியை வழங்கக்கோரி வருகிற 7-ந் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அரியலூர்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் பங்குதாரர்கள் சங்க கூட்டமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2019-2020-ம் ஆண்டுக்கு மார்ச் 8-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வெட்டிய கரும்புக்கான பாக்கிதொகை ரூ.8 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. கொரோனா தொற்றால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால் தற்போது கரும்பு விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

வாகன வாடகை ரூ.40 லட்சம் பாக்கி தொகையையும் உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு உத்தரவின் பேரில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுமார் ரூ.9 கோடிக்கு மொலாசஸ் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த தொகை இதுவரை வரவில்லை. அந்த தொகையை அரசு தலையிட்டு பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு பெற்றுத்தரவேண்டும்.

பாக்கி தொகை

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் உத்தரவின்பேரில், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரைஆலைக்கு 2014-15-ம் ஆண்டு மொலாசஸ் கொடுத்ததில் தமிழ்நாடு சர்க்கரை கழகம், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு தரவேண்டிய பாக்கி தொகை ரூ.96 லட்சமும், 2019-20-ம் ஆண்டு மொலாசஸ் கொடுத்ததில் பாக்கி தொகை ரூ.35 லட்சமும் தரவேண்டியுள்ளது. அதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

2015-16, 2016-17-ம் ஆண்டுக்கான கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலை ரூ.450-ஐ விவசாயிகளுக்கு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தும், அரசு பாக்கித் தொகையை வழங்காததால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து அதற்கு வாய்தா வாங்கிக்கொண்டு காலம் தாழ்த்தும் தமிழக அரசை எங்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

ஆலை முன்பு போராட்டம்

உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை டன்னுக்கு ரூ.450-ஐ வழங்க வேண்டும் என எங்கள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலிப் பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் பங்குதாரர்கள் சங்கங்களின் சுட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். மனு கொடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சக்திவேல், பாட்டாளி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட விவசாயிகள் வந்திருந்தனர். மேலும் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையர், பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஆகியோருக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர்.

Next Story