சுசீந்திரத்தில் பொது மேலாளருக்கு கொரோனா: தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடப்பட்டதால் பரபரப்பு


சுசீந்திரத்தில் பொது மேலாளருக்கு கொரோனா: தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 8:23 AM IST (Updated: 26 Jun 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரத்தை சேர்ந்த வங்கி பொது மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி பணியாற்றிய வங்கி மூடப்பட்டது. இதனால், சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுசீந்திரம்,

சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் பகுதியை சேர்ந்தவர் 38 வயது ஆண். இவர் மதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பொதுமேலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும், 1 வயதில் குழந்தையும் உள்ளனர். மனைவி சுசீந்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். பொது மேலாளர் தினமும் சுசீந்திரத்தில் இருந்து மதுரைக்கு சென்று பணி முடிந்து வீடு திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்கு சென்று திரும்பியபோது ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி தனிமை முகாமில் இருந்த பொதுமேலாளரை சுகாதாரத்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வங்கி மூடப்பட்டது

பொது மேலாளர் தினமும் பணிக்கு சென்று வீடு திரும்பியதால், அவரது குடும்பத்தினருக்கும் தொற்று இருக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் கருதினர். இதையடுத்து ஆஸ்ராமம் பகுதிக்கு விரைந்து சென்று அவரது மனைவி, குழந்தை, பொது மேலாளரின் தாய், தந்தை என 4 பேரையும் ஆம்புலன்சு மூலம் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே பொது மேலாளரின் மனைவிக்கும் தொற்று பரவி இருக்கலாம் என்று வங்கியின் தலைமை நிர்வாகம் வங்கியை மூட உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை சுசீந்திரத்தில் உள்ள அந்த வங்கி மூடப்பட்டது. மேலும், வங்கியில் பணியாற்றிய பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கருதினர். அதன்படி வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கடந்த 3 நாட்களில் வந்த வாடிக்கையாளர்களின் பட்டியலை தயார் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் கோரிக்கை

சுசீந்திரம் பேரூராட்சி சார்பில் ஆஸ்ராமம் பகுதியில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், சுசீந்திரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வர்க்கீஸ் தலைமையிலான பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் பிளச்சிங் பவுடர், கிருமி நாசினியும் தெளித்து தடுப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமேலாளர் வீடு உள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வங்கி உள்ளதால் சுசீந்திரம், ஆஸ்ராமம், அக்கரை, வழுக்கம்பாறை, காக்கமூர் உள்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வாடிக்கையாளராக உள்ளனர். தொற்று நடவடிக்கையாக வங்கி மூடப்பட்டதால் அங்கு சென்று வந்த தங்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, பேரூராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தொற்று நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story