ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jun 2020 3:50 AM GMT (Updated: 26 Jun 2020 3:50 AM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

வேலூர்,

வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்கு பஜார், சாரதி மாளிகைக் கடை வியாபாரிகள், தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் பலருக்கு சளிமாதிரி சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதில் நேற்று முதல் கட்டமாக 450 பேரின் பரிசோதனை முடிவு வந்தது. அதில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் பழகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்ந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 590 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 426 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 924 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 998 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருப்பத்தூர்

இதேபோல திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

Next Story