பெங்களூருவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா


பெங்களூருவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 5:30 AM IST (Updated: 27 Jun 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிட்டி மார்க்கெட், சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. போலீசாருக்கு கொரோனா பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கொரோனா பரவுவது மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த ஏட்டுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், 48 மணிநேரத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபோல, சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த பகுதியில் சிட்டி மார்க்கெட் இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 5 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையமும் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் இதுவரை 47 போலீசார் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த போலீசாருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Next Story