மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் கடுமையான முயற்சியால் கொரோனா கட்டுக்குள் உள்ளது அனைத்துக்கட்சி கூட்டம் தேவை இல்லை + "||" + Corona is under the control of the Tamil Nadu government and there is no need for an all party meeting

தமிழக அரசின் கடுமையான முயற்சியால் கொரோனா கட்டுக்குள் உள்ளது அனைத்துக்கட்சி கூட்டம் தேவை இல்லை

தமிழக அரசின் கடுமையான முயற்சியால் கொரோனா கட்டுக்குள் உள்ளது அனைத்துக்கட்சி கூட்டம் தேவை இல்லை
அரசு மேற்கொண்டு வரும் கடுமையான முயற்சிகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தேவை இல்லை என்றார்.
திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலத்தில் இருந்து திருச்சி சென்றார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு

அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், முக்கொம்பில் புதிய கதவணை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.


அதன்பிறகு சிறு, குறு தொழில் முனைவோர்கள், விவசாய சங்க தலைவர்கள், மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து தொழில், வர்த்தகம் மற்றும் வேளாண்மை சார்ந்த பிரச்சினைகள் பற்றி கேட்டு அறிந்தார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு சரியான முறையில் பின்பற்றி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கூட கொரோனா தொற்று அதிகமாக பரவி அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனங்களுக்கு கடன் உதவி

ஊரடங்கு காலத்தில் தொழில் துறை முற்றிலுமாக முடங்கிப் போனது. பிரதமர் 6 முறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 579 சிறு, குறு நிறுவனங்களுக்கு 4ஆயிரத்து 145 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக நிதி உதவி கிடைக்கப்பெற்று உள்ளது. இதனால் 74 ஆயிரத்து 388 நிறுவனங்களுக்கு 2ஆயிரத்து 265 கோடி ரூபாய் கடன் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. இது, இந்திய அளவில் 10 சதவீதம் ஆகும்.

உணவுப் பூங்கா

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட் சார்பில் 1,077 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் ரூ.250 கோடியில் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன.

அது மட்டும் அல்லாமல் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய உணவுப் பூங்கா ஒன்று அந்த வளாகத்திலேயே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மணப்பாறை வட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில் அடுக்கு காகித உற்பத்தி திறனை அதிகரிக்க ஆலை விரிவாக்க திட்டம் ரூ.2,520 கோடி முதலீட்டில் 2 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு முதல் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் 2,022-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள இந்த கால கட்டத்தில் கூட தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்பட 17 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனால், 15 ஆயிரத்து 125 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க செய்ய இந்த அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

2 மாத காலமாக அரசுக்கு எந்தவித வருமானமும் இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. கடைகளும் இயங்கவில்லை. அதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ரூ.35 ஆயிரம் கோடி 2 மாதமாக வரவில்லை. மொத்தமாக ரூ.85 ஆயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா?

கேள்வி:- தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் திட்டம் உள்ளதா?

பதில்:- வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர்கள், வல்லுனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அவர்கள் சொல்கிற கருத்துக்கள், மத்திய அரசு என்ன அறிவிக்க இருக்கிறதோ அதனை பொறுத்துதான் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

அக்டோபர் மாதம்

கேள்வி:- டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் கொரோனா வைரஸ் தாக்குதல் அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என கூறப்பட்டு உள்ளதே?

பதில்:- உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார துறை, மருத்துவ நிபுணர்கள், வல்லுனர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார்கள். இது ஒரு புதிய வைரஸ். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அனைத்துக் கட்சி கூட்டம்

கேள்வி:-கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுமா?

பதில்:- இது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. உலகமே சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சினை. இதில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையா? என தெரியவில்லை. அதாவது இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பிரச்சினை என்றால் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாம். இது முழுக்க, முழுக்க மருத்துவ துறையை சார்ந்தது. மருத்துவ நிபுணர்கள், வல்லுனர்கள் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார துறை, ஐ.சி.எம்.ஆர். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் அடிப்படையில்தான் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இதில் அரசியல் கட்சிகள் பேசி செயல்படுத்த முடியாது. உரிய மருந்து கண்டு பிடித்தால்தான் இந்த வைரசை ஒழிக்க முடியும். அதுவரை பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இலவச மின்சாரம் தொடரும்

கேள்வி:- மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவினால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

பதில்:- இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதில் எந்த பிரச்சினையும் இதுவரை வரவில்லை. இந்த அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரத்தை வழங்கும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு பாதிரியார் பலி
கொரோனாவுக்கு பாதிரியார் ஒருவர் பலியானார்.
2. கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா' : சீனா எச்சரிக்கை
கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா’ கஜகஸ்தானில் பரவுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் சாவு; 262 பேருக்கு நோய் தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் மேலும் 262 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. கோவையில் ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
கோவை ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
5. அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி; கடைகளை அடைக்க உத்தரவு
அரியலூர் நகரில் பூக்கடை வைத்திருந்த ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.