பட்டுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை போலீசார் விசாரணை


பட்டுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2020 5:03 AM IST (Updated: 27 Jun 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே பாலத்தின் அடியில் பழ வியாபாரி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு கிராமம் பிரதான சாலைத் தெருவைச் சேர்ந்தவர், ஸ்டீபன் ராஜ்(வயது 55). இவர், பலாப்பழம், மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை அறுத்து கொலை

நேற்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் அணைக்காடு-துவரங்குறிச்சி கிராமத்திற்கு இடையே உள்ள நசுவினி ஆற்றுப்பாலத்தின் அடியில் ஸ்டீபன்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாய் கிரிதர், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்டீபன் ராஜ் உடலுக்கு அருகில் ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட சில பொருட்கள் கிடந்தன.

போலீசார் விசாரணை

பின்னர் போலீசார், ஸ்டீபன் ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன்ராஜ் கொலைக்கான காரணம் என்ன?. கொலையாளிகள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story