சிறையில் தந்தை-மகன் இறந்த விவகாரம்: நாமக்கல்லில் 60 சதவீத கடைகள் அடைப்பு


சிறையில் தந்தை-மகன் இறந்த விவகாரம்: நாமக்கல்லில் 60 சதவீத கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 7:26 AM IST (Updated: 27 Jun 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை-மகன் இறந்த விவகாரத் தில் நீதி கேட்டு நாமக் கல்லில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதையொட்டி 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நாமக்கல்,

சாத்தான்குளம் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடையை மூடுவது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரும் கைது செய்யப்பட்டு கோவில் பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு அடுத்தடுத்து இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். இவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாமக் கல் மாவட்டத்தில் நேற்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

அதையொட்டி நாமக்கல் லில் நகை கடைகள், செல்போன் கடைகள், ஜவுளி கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில துணி கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள் திறந்து இருந்தன. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. தகவல் அறிந்த வணிகர் சங்கத்தினர் திரண்டு சென்று கடைகளை அடைக்குமாறு கூறினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிலர் கடைகளை மூடினர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் சிலர் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. இதனிடையே நாமக்கல் நகரில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாகவும், ராசிபுரம், மோகனூர் உள்பட மாவட்டம் முழுவதும் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கிராமங்களில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்படவில்லை எனவும் போலீசார் கூறினர். 

Next Story