விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர் தம்பதி உள்பட 74 பேருக்கு கொரோனா


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர் தம்பதி உள்பட 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 7:33 AM IST (Updated: 27 Jun 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர் தம்பதி உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 695 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 433 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 250 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 17 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் விழுப்புரம் அம்மச்சாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த 47 வயதுடைய நபரும், விழுப்புரம் சி.என்.பாளையத்தை சேர்ந்த 35 வயது பெண்ணும், சாலாமேட்டை சேர்ந்த 69 வயது முதியவரும், விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்த 30 வயது வாலிபரும், வண்டிமேட்டை சேர்ந்த 27 வயது வாலிபரும், வி.மருதூரை சேர்ந்த 80 வயது மூதாட்டியும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவரும், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையை சேர்ந்த 66 வயது முதியவரும், திண்டிவனம் சரவண பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 33 வயது பெண்ணும், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 25 வயது பெண்ணும், செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த 42 வயதுடைய தனியார் மருத்துவமனை டாக்டரும், அவரது மனைவியான 40 வயதுடைய டாக்டரும், விழுப்புரம் சாமிப்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுமியும், மரக்காணத்தை சேர்ந்த 25 வயது வாலிபரும், மேல்மலையனூர் அருகே கொடுக்கண்குப்பத்தை சேர்ந்த 28 வயது பெண்ணும், விழுப்புரம் வி.சித்தாமூரை சேர்ந்த 35 வயது வாலிபரும், விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரை சேர்ந்த 56 வயதுடைய நபரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

712 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் 17 பேரும் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒருவர் மட்டும் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 325 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 321 பேரின் முடிவுகள் வெளியானது. இதில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Next Story