திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 8:57 AM IST (Updated: 27 Jun 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. இதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. 5-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் உயர தொடங்கியுள்ளது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருகிறவர்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வெளிபகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருகிறவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

14 பேருக்கு கொரோனா

மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருக்கிறவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் அம்மன்நகர் பூலுவப்பட்டியை சேர்ந்த 34 வயது கர்ப்பிணி, அவினாசியை சேர்ந்த 45 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 24 வயது பெண், உடுமலையை சேர்ந்த 54 வயது பெண் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த 35 வயது பெண், 50 வயது பெண், 11 வயது சிறுமி, 30 வயது ஆண், 25 வயது ஆண், 7 வயது சிறுவன், கருவம்பாளையத்தை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி, திருப்பூர் சீனிவாசா நகரை சேர்ந்த 66 வயது ஆண், குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த 65 வயது ஆண், 4 வயது சிறுவன் ஆகிய 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் இவர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

141-ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொரோனா பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக இருந்தது. இந்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 2 பேரின் கணக்கு நேற்று குறைக்கப்பட்டு, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 126 என கணக்கிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மேலும், 2 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140-ஆக இருந்தது. திருப்பூர் உடுமலையை சேர்ந்த எகிப்தில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதால், அவரின் பாதிப்பு கணக்கும் திருப்பூர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story