மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா அரசு பஸ் கண்டக்டருக்கு தொற்றால் பரபரப்பு


மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா அரசு பஸ் கண்டக்டருக்கு தொற்றால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 4:40 AM IST (Updated: 28 Jun 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசு பஸ் கண்டக்டருக்கு தொற்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் நபர்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டு தொற்று பரவிவருகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், உருமானந்தபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், புதுக்கோட்டை கலீப்நகரை சேர்ந்த 24 வயது பெண், அரசமலையை சேர்ந்த 7 வயது சிறுமி, கே.வி.கோட்டையை சேர்ந்த 39 வயது ஆண், ஆகியோருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

தனியார் நிறுவனம் மூடல்

விராலிமலையை சேர்ந்த 34 வயது பெண், 37 வயது ஆண், 29 வயது ஆண், 37 வயது ஆண், 28 வயது ஆண், 26 வயது பெண், 25 வயது ஆண், 24 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா பாதித்திருந்தது. இவர்களில் 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திருச்சியிலிருந்து வந்து பணிபுரிந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 8 பேருக்கும், நேற்று 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதில் பெரும்பாலானோர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கீரனூர்

இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்த பகுதிகளான அம்மன் கோவில் தெரு, பெரியார் நகர், ஈஸ்வரி நகர், ரத்னா கார்டன், சக்தி விநாயகர் நகர், குறிச்சிப்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட 6 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கீரனூர் முஸ்லிம் தெருவில் 80 வயது முதியவர் ஒருவருக்கும், பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த 45 வயதுடைய அரசு பஸ் கண்டக்டருக்கும் தொற்று உறுதியானது. 2 பேரும் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 80 வயது முதியவரின் குடும்பத்தில் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கண்டக்டரின் மனைவியான வருவாய் ஆய்வாளருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.

கந்தர்வகோட்டை

தொற்று உறுதியான கண்டக்டர் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் வேலூரில் உள்ள நகைக்கடையில் பொற்கொல்லராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பின் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால் அவரது முகவரியில் மருத்துவகுழுவினர் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை. கந்தர்வகோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தது தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரிமளம்

இதேபோல சென்னையில் இருந்து அரசமலைக்கு வந்த 48 வயது ஆண், ஆவுடையார்கோவில் அருகே குளத்தூரை சேர்ந்த 32 வயது ஆண், பொன்னமராவதி பூக்குடி அருகே 3 பேருக்கும், அரிமளம் கே.ராயவரம் கிராமத்திற்கு வந்த 18 பேரில் 52 வயதுடைய ஒரு ஆண், 35 வயதுடைய ஆண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

Next Story