தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டுகிறது


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டுகிறது
x
தினத்தந்தி 28 Jun 2020 1:34 AM GMT (Updated: 28 Jun 2020 1:34 AM GMT)

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டுகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக தாக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா பரவிய காலக்கட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தது. பின்னர் வெளிநாடு, வெளி மாநிலம் சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இடையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இந்த மாவட்டம் மாறியது.

இ-பாஸ் கட்டாயம்

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து, அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் கொரோனா பரவுவது அதிகரிக்க தொடங்கியது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றாலும், கார், ரெயில்களில் பயணம் செய்தவர்கள் இ-பாஸ் வாங்கி வந்தனர். ஆனால் இருசக்கர வாகனங்களில் பல்வேறு வழியாக வந்தவர்களை கண்டறிய முடியவில்லை.

வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்து தங்கி இருந்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறு தங்கி இருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அதிகரிப்பு

மேலும் ரெயில், கார் போன்ற வாகனங்களில் சென்னையில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி 178 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 174 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 181 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆயிரத்தை எட்டுகிறது

தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை 396 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 341 பேரும், நாகை மாவட்டத்தில் 249 பேரும் என 3 மாவட்டங்களில் 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் இந்த 3 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் எல்லைகளில் இ-பாஸ் பெற்று வருபவர்களும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாவட்ட எல்லைகளில் போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறையினர் அடங்கிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story