திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு, நர்சுகள் உள்பட 39 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு, நர்சுகள் உள்பட 39 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jun 2020 9:04 AM IST (Updated: 28 Jun 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு, நர்சுகள் உள்பட மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனவே, வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 பெண்கள், 2 சிறுமிகள் மற்றும் 2 முதியவர்கள்இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, மதுரையில் வேலை செய்த அரசு மருத்துவமனை நர்சு, தனியார் மருத்துவமனை நர்சு, போலீஸ் ஏட்டு, திருச்சியில் ரெயில்வேயில் வேலை செய்த ஊழியர் மற்றும் வங்கி பெண் ஊழியர், மதுரைக்கு சென்று வந்த சரக்கு வாகனத்தின் டிரைவர், கிளனர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தாய்-மகன்

இதுதவிர டெல்லியில் இருந்து வந்த வாலிபர் மற்றும் தாய்-மகன், தந்தை-மகன், மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் வேலை செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள், மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தவர்கள், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் ஒரே நாளில் 39 பேர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story