கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை


கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2020 9:11 AM IST (Updated: 28 Jun 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானையை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் பயிர்கள், வீடுகள் சேதம் அடைகின்றன. மேலும் சில நேரங்களில் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள பாண்டியாறு குடோன், முன்டக்குன்னு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டுயானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேலும் வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கிராமங்களுக்குள் காட்டுயானை நுழையாமல் தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

விவசாயிகள் தவிப்பு

அதன்பேரில் தேவாலா வனத்துறையினர் நேரில் சென்று, காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. தற்காலிகமாக வனத்துக்குள் செல்லும் காட்டுயானை, மீண்டும் கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. குறிப்பாக பட்டப்பகலில் கிராமங்களுக்குள் வந்து நிற்பதை காண முடிகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரவே கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் விளைநிலங்களில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர் நடவடிக்கை

இதுகுறித்து கிராம மக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

முன்டக்குன்னு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானை மூர்க்க குணம் உடையது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டால், சிறிது தூரம் வனப்பகுதிக்குள் செல்கிறது. அதன்பின்னர் மீண்டும் விவசாய பயிர்களை தேடி கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. சில சமயங்களில் வனத்துறையினரையும் விரட்டி உள்ளது. தற்போது பட்டப்பகலில் விவசாய நிலங்களில் முகாமிட்டு வருகிறது. இதனால் நிம்மதியாக வெளியே நடமாட முடியவில்லை. எனவே வனத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு காட்டுயானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும். மேலும் மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story