வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்


வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jun 2020 7:54 AM IST (Updated: 29 Jun 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி வலியுறுத்தி உள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

இதை தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

கிருமி நாசினி

ஒவ்வொரு வணிக நிறுவனங்களிலும் தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் நுகர்வோருக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. கடைக்கு வரும் நுகர்வோர்களை கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று பொதுமக்களை வணிகர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், சீனிவாசன், மேகலா, இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், அம்மாதுரை, தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம், மாநில துணைத்தலைவர் கிரிதர், தர்மபுரி நகர வணிகர் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் ஆண்டாள் ரவி மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story