நாமக்கல் மாவட்டத்தில் 15,926 பேருக்கு கொரோனா பரிசோதனை 2,366 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் 15,926 பேருக்கு கொரோனா பரிசோதனை 2,366 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 2:34 AM GMT (Updated: 29 Jun 2020 2:34 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 15,926 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,366 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறினார்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று முன்தினம் வரை சுகாதாரத்துறை அறிவிப்பின்படி 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில், 87 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 7 பேர் மற்றும் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்ட சுமார் 20 பேருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பு முகாம்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

15,926 பேருக்கு பரிசோதனை

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 32 மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உமிழ்நீர் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. தினசரி 300 முதல் அதிகபட்சமாக 500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை 15,926 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்களையும் கண்காணித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 547 பேர் சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல் வீடுகளில் 1,819 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக மாவட்டம் முழுவதும் 2,366 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மாவட்டத்தை பொறுத்த வரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story