செஞ்சியில் 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டியது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


செஞ்சியில் 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டியது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 29 Jun 2020 2:41 AM GMT (Updated: 29 Jun 2020 2:41 AM GMT)

செஞ்சியில் நேற்று மாலை 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

செஞ்சி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மதியம் 12 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் செஞ்சி பகுதியில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மாலை 4.30 மணியளவில் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. பின்னர் வேகமெடுத்து, இடி- மின்னலுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. இந்த மழை 1½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடந்ததால், அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. கூட்டு ரோடு, காந்தி பஜார் ஆகிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக செஞ்சி பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அங்குள்ள கடைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. மேலும் செஞ்சி சக்கராபுரம் பழைய காலனி, பீரங்கி மேடு மீனவர் தெரு, எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செஞ்சியில் மட்டும் நேற்று மாலை 1½ மணி நேரத்தில் 11.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேல்மலையனூர், திண்டிவனம்

இதேபோல் மேல்மலையனூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேலாக பதிவாகி மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று மாலை கொட்டிய கனமழையால் பூமி குளிர்ந்து, இதமான காலசூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாலை 4 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இதனால் உளுந்தூர்பேட்டையில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. கெடிலம், பெரும்பாக்கம், ஆசனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

Next Story