அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்


அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 29 Jun 2020 10:07 AM IST (Updated: 29 Jun 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் காலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்து விட்டு இரவில் பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் கோவிலை திறக்க சென்ற போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மற்றொரு உண்டியலையும் காணவில்லை. இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். தலைவர் சுப்பையா, செயலாளர் அய்யப்பன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கோவிலுக்கு வந்து உண்டியலை தேடினர். அப்போது மாயமான உண்டியல் அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் உடைக்கப்பட்டு கிடந்தது.

கொள்ளை

இதுதொடர்பாக ஊர் தலைவர் சுப்பையா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மற்றொரு உண்டியலை தூக்கி சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அம்மன் கோவில் அருகே ராகவேந்திரா கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் ராகவேந்திரா கோவிலில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்திருக்கலாம் என்றும் அங்கு முடியாததால் முத்தாரம்மன் கோவிலில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆகவே கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story