குமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று


குமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 Jun 2020 4:39 AM GMT (Updated: 29 Jun 2020 4:39 AM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

பத்மநாபபுரம்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தினம் தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் வெளியூர்களில் இருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.

தற்போது கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

மூதாட்டி

தக்கலை அருகே ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24-ந் தேதி அந்த ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

இந்தநிலையில், மூதாட்டிக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டியுடன் உறவினர் ஒருவரும் உடன் சென்றார். செல்லும் வழியில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உடல் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உறவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். மூதாட்டியின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை தகுந்த பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் என தெரிகிறது.

இதற்கு முன் மருங்கூரை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் இறந்தார். தற்போது மூதாட்டியும் பலியாகியுள்ளதால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தக்கலையில் தொற்று அதிகரிப்பு

இதற்கிடையே தக்கலையில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சாரோடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், 31 வயதுடைய வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சாரோடு பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தக்கலை பகுதியில் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

27 பேர் பாதிப்பு

மாவட்டத்தில் நேற்று சாரோடு சுண்டவிளை பகுதியை சேர்ந்த 20 வயது பெண், கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் 13 வயது சிறுமி, சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர், தக்கலை ராமன்பரம்பூர் பகுதியை சேர்ந்த 61 வயது பெண், பறக்கை பகுதியை சேர்ந்த 43 வயது ஆண், கொட்டாரம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், மாதவபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது ஆண், கிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த 26 வயது ஆண், அருமனை பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், வாணியக்குடி பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், நாகர்கோவிலை சேர்ந்த 29 வயது பெண் டாக்டர், கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்த 43 வயது பெண், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், கோட்டாரை சேர்ந்த 52 வயது பெண், வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 41 வயது ஆண், கீழ்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது ஆண் மற்றும் 26 வயது ஆண், இரணியல் பகுதியை சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 49 வயது பெண், தூத்தூர் பகுதியை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட 27 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகின்றன.

239 பேர் சிகிச்சை

குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 248 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதையடுத்து தற்போது 239 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story