கொரோனா நோயாளிகளுக்காக விதவிதமாக தயாரிக்கப்படும் உணவுகள் சவால் நிறைந்த பணியில் ஈடுபடும் பெண்கள்


கொரோனா நோயாளிகளுக்காக விதவிதமாக தயாரிக்கப்படும் உணவுகள் சவால் நிறைந்த பணியில் ஈடுபடும் பெண்கள்
x
தினத்தந்தி 29 Jun 2020 10:14 AM IST (Updated: 29 Jun 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்காக விதவிதமாக தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மட்டுமின்றி சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதனை மறுக்கும் விதமாக அங்குள்ள நோயாளிகளுக்கு ஏராளமான உணவு வகைகளை 35 பேர் கொண்ட சமையல் குழுவினர் செய்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் கபசுர குடிநீர் முதல் இரவு பழங்கள் கொடுப்பது மற்றும் பல்வேறு விதமான உணவுகளை தயாரித்து சமையல் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த சமையல் குழுவில் 35 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் 30 பேர் பெண்கள். சவால் நிறைந்த இந்த பணியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர்.

பல வகை உணவு

இதுகுறித்து நியூட்ரிசியன் வனிதா கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை எந்த அளவுக்கு முக்கியமாக வழங்கப்படுகிறதோ அதே அளவுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்குவதும் முக்கியமானது. அதற்காக உணவு முறையாளர்கள்(நியூட்ரிஷியன்) கொண்ட குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நோயாளிகளுக்கு எந்த நேரத்தில் எந்த உணவுகளை வழங்க வேண்டும் என்பது குறித்து சமையல் குழுவினருக்கு பட்டியலிடுகின்றனர். அதன்படி கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு காலை 6 மணி, மாலை 3 மணி என இருவேளைகளில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பார், ராகி சேமியா, உப்புமா, வெண்பொங்கல், காய்கறிகள் நிறைந்த கிச்சடி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 10.30 மணிக்கு மிளகு, மஞ்சள் கலந்த 200 மி.லி. பால் வழங்கப்படுகிறது. அதனுடன் பொரிகடலை. அவித்த முட்டை வழங்குகிறோம்.

மதிய உணவாக சாதம், சாம்பார் உணவுடன் பூண்டு ரசமும், கீரையும் வழங்குகிறோம். அதுபோல் ஒரு அவித்த முட்டை கண்டிப்பாக வழங்குகிறோம். இதுதவிர தக்காளி சாதம், பிரியாணி, தயிர் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என தினம் ஒரு நாள் மாறி மாறி வழங்கி வருகிறோம். ஒரு வாரத்திற்கு முன்பு வரை பாயாசம், வடகம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வந்தோம். ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பாயாசம் வழங்க முடியவில்லை.

இரவு உணவு

மாலை 4 மணிக்கு இஞ்சி கலந்த டீ வழங்கப்படுகிறது. அதனுடன் சுண்டல் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் நிறைந்த நீராகாரமும் வழங்கப்படுகிறது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அனைத்து நோயாளிகளுக்கும் இரவு உணவு வழங்கப்படுகிறது. இந்த சவால் நிறைந்த பணியில் பெண்கள் தங்களை ஈடுபடுத்தி கொரோனா நோயாளிகளுக்கு புரத சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார்கள். இந்த உணவுகள் அனைத்தும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு கொரோனா வார்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அது வழங்கப்படுகிறது.

பழங்கள்

உணவு வழங்குவது போல் தினமும் ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகை பழங்களும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நோயாளிகள் குணமடைந்து தற்போது தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story