நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்


நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்
x
தினத்தந்தி 29 Jun 2020 10:32 AM IST (Updated: 29 Jun 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி, வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி,

நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா. இவர், நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதா, 3-வது முறையாக பீட்டர் பால் என்பவரை சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி எலிசபெத் ஹெலன், சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், கூறி இருப்பதாவது:-

விவாகரத்து அளிக்கவில்லை

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே என்னுடன் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால், நடிகை வனிதாவை திருமணம் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

நடிகை வனிதா, பீட்டர்பாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அப்போதே எலிசபெத் ஹெலன், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பீட்டர்பால் தரப்பை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தாங்கள் எந்த திருமண ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அப்படி செய்யும் பட்சத்தில் முறையான விவாகரத்துக்கு பின்னரே வனிதாவுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் தனது மனைவிக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் நேற்று முன்தினம் திடீரென பீட்டர் பால், நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டது எலிசபெத் ஹெலன் தரப்பினரை அதிர்ச்சி அடையசெய்தது. அதனால் மீண்டும் அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நடிகை வனிதா, தற்போது 3-வது திருமணத்தின் போதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Next Story