போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய ஆய்வு: வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை


போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய ஆய்வு: வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
x
தினத்தந்தி 30 Jun 2020 12:00 AM GMT (Updated: 29 Jun 2020 6:06 PM GMT)

வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய ஆய்வு நடத்திய மாஜிஸ்திரேட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து இறந்தனர். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்பேரில் கடந்த 27-ந் தேதி கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயிலில் இருந்த கைதிகள் மற்றும் சிறைக்காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று சிறையில் இருந்து ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12.10 மணிக்கு மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு ஆவணங்களை கேட்டு உள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே பணியாற்றிய எழுத்தர்உள்ளிட்ட 2 பேர் ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை அவர் ஆய்வு செய்தார். விடிய, விடிய நடந்த இந்த விசாரணை நேற்று அதிகாலை 4 மணிக்குமுடிந்தது.

சுமார் 16 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு மாஜிஸ்திரேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நேற்று சாத்தான்குளத்தில், இறந்த வியாபாரிகளின் உறவினர்களிடம் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று காலை 11.30 மணிக்கு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளின் குடும்பத்தினர் மற்றும் சாட்சி அளிப்பவர்கள் திருச்செந்தூருக்கு வரவழைக் கப்பட்டனர். அங்கு சாட்சிகள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் தாக்கப்பட்டபோது, மாற்று உடை கொடுத்து விட்டு வாங்கி வைத்திருந்த ரத்தக்கறை படிந்த உடைகளை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் உறவினர்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

முதலில் 3 சாட்சிகளிடமும், தொடர்ந்து ஜெயராஜ் மனைவி செல்வராணியிடமும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து மற்றவர்களிடம் இரவு வரை விசாரணை நடந்தது. அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை அவர் பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை அறிக்கை விரைவில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story