உயர் மின்கோபுரத்தால் விவசாய நிலம் பாதிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா


உயர் மின்கோபுரத்தால் விவசாய நிலம் பாதிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 30 Jun 2020 12:09 AM GMT (Updated: 30 Jun 2020 12:09 AM GMT)

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் குடைபிடித்தபடி தர்ணாவில் ஈடுபட்டனர். உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு கோவை மாவட்டத்தைப்போல் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் விவசாயிகள் திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்புறம் வளாகத்தில் குடைபிடித்தபடி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் பங்கேற்றார். தெற்கு போலீஸ் கமிஷனர் நவீன்குமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதாவும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோவை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை போல் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

பின்னர் முக்கிய நிர்வாகிகளான குமார், ஈசன் உள்ளிட்டவர்கள் மட்டும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீதுவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது :-

திருப்பூர் மாவட்டத்தில் பவர் கிரீட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களின் உயர் அழுத்த மின் கோபுர மின்திட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் கடுமையாக போராடி பல்வேறு அரசாணைகளை பெற்றுள்ளனர். அந்த அரசாணைகளின்படி கோவை மாவட்ட கலெக்டர், மேற்கண்ட மின்கடவு திட்டங்களின் இழப்பீட்டுக்கான நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக சட்டத்துக்கு உட்பட்டும், கலெக்டர் என்ற தனது அதிகார வரம்புக்கு உட்பட்டும் வழிமுறையை உருவாக்கியுள்ளார்.

அதாவது ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள உச்சபட்ச வழிகாட்டி மதிப்புடன், அதனுடன் 25 சதவீத கூடுதலாக சேர்த்து அந்த மதிப்பை வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கான மதிப்பாக நிர்ணயம் செய்கிறார்.

இதனால் விவசாயிகளுக்கு சற்று கூடுதலாக இழப்பீடு கிடைக்கிறது. ஆனால் இந்த இழப்பீடும் சந்தை மதிப்பில் இல்லை என்பது வருந்தத்தக்கது. இருப்பினும் ஓரளவு மேம்பட்டதாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு மட்டுமே தற்போது இழப்பீடு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எனவே அதை தவிர்த்து ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள உச்சபட்ச வழிகாட்டி மதிப்புடன் கூடுதலாக 25 சதவீதம் சேர்த்து கோவை மாவட்டத்தில் வழங்கியதைப்போல் அரசாணையை பின்பற்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலத்துக்கு இழப்பீடாக நிர்ணயித்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி 3 நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story