3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயார் - சிறப்பு அதிகாரி கோபால் தகவல்


3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயார் - சிறப்பு அதிகாரி கோபால் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2020 12:55 AM GMT (Updated: 30 Jun 2020 12:55 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக சிறப்பு அதிகாரி கோபால் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட சிறப்பு அதிகாரி கோபால் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்தடுப்புகுறித்து துறை வாரியாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமுர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ருபன்சங்கர்ராஜ், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, திருப்பூர் மாநகராட்சிஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, பொது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், தாசில்தார்கள் பாபு(திருப்பூர் வடக்கு), சுந்தரம்(திருப்பூர் தெற்கு) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையை சிறப்பு அதிகாரி கோபால் ஆய்வு செய்தார். மேலும் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவல்துறைக்காக 50 படுக்கையுடன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை, தென்னம்பாளையம், அமர்ஜோதி நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களுக்கு சென்று சிறப்பு அதிகாரி ஆய்வு செய்தார். ஆய்வு குறித்து சிறப்பு அதிகாரி கோபால் கூறியதாவது-

திருப்பூர் மாவட்டத்தில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் 26 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அதற்கான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்தாலும் கூட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் 9 தாலுகா அளவிலும் தலா 100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் 100 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை தயாராக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளையும் சேர்த்தால் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் தயாராக இருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு சந்தேகம் மற்றும் அறிகுறி தென்பட்டவுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அனைவரும் முககவசத்தை சரியாக அணிய வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story