காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது நாராயணசாமி அறிவுறுத்தல்


காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது நாராயணசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2020 2:16 AM GMT (Updated: 30 Jun 2020 2:16 AM GMT)

காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் எனது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 5 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நான் வீட்டிலிருந்து எனது பணிகளை கவனிக்கிறேன்.

புதுவையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூனிச்சம்பட்டு பகுதியில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மூலம் இந்த தொற்று பரவியுள்ளது. இதுதொடர்பாக கூனிச்சம்பட்டு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தேன். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே நடமாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாரிடம் கூறி உள்ளேன். ஆனால் சிலர் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்வதாக புகார் வருகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

அரசின் முயற்சியால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறி உள்ளேன். ஊரடங்கின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து முடிவு எடுப்போம். காவல்துறையினர் மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வருகின்றன.

இந்த நேரத்தில் மக்கள் முக கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்பதை மட்டுமே காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். இது ஆவணங்களை கேட்க வேண்டிய நேரம் அல்ல. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுவைக்கு மத்திய அரசு நிதி தரவில்லை. மாநில அரசின் நிதியில் இருந்து தான் திட்டங்களை செயல்படுத்துகிறோம். நமது நிதியை நம்பி மட்டுமே நாம் உள்ளோம். இந்த நேரத்தில் காவல்துறையினரும், உள்ளாட்சித்துறையினரும் மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. புதுவைக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியில் இருந்து அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். சில இடங்களில் இது வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் நிவாரணப் பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிதி பற்றி கவலைப்பட வேண்டாம். இதேபோல் எதிர்ப்பு சக்தியை தரும் ஓமியோபதி மாத்திரையை அனைத்து குடும்பத்தினருக்கும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயரும். இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 18 லட்சம் கோடி மத்திய அரசு சம்பாதித்துள்ளது. அதை மக்களிடம் கொடுக்காமல் மேலும் மேலும் சுமையை ஏற்றி வருகிறார்கள். இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story