பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்படும்: ஜூலை 31-ந்தேதி வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு


பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்படும்: ஜூலை 31-ந்தேதி வரை புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 July 2020 12:21 AM GMT (Updated: 1 July 2020 12:21 AM GMT)

புதுச்சேரியிலும் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், நாளை மறுநாள் முதல் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தது.

பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகம் எடுத்தது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கிருந்து வந்தவர்களால் தான் புதுச்சேரியில் தொற்று அதிகமாவதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து கடற்கரையை மூடியும், கடைகள், பூங்காக்கள் திறக்கும் நேரத்தை குறைத்தும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் புதுவையிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்து வந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுவை மாநிலத்திலும் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், கோச்சிங் சென்டர், தியேட்டர்கள், மதுபார்கள் ஆகியவை தொடர்ந்து முழுமையாக மூடப்பட்டு இருக்கும். நமது மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பினையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து வருபவர்களால் புதுவையில் தொற்று அதிகமாக பரவியது. கொரோனா பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமானதாகும்.

ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதித்தோம்.

இப்போது அமைச்சர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே உள்ள தளர்வுகள் நாளை (வியாழக்கிழமை) வரை அமலில் இருக்கும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படலாம். ஓட்டலுக்கும் இது பொருந்தும். விதிகளை யாராவது மீறினால் அபராதம் விதிக்கப்படும். வெளிமாநிலத்தவர் பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story