சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை திருப்தி அளிக்கிறது மதுரை ஐகோர்ட்டு பாராட்டு


சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை திருப்தி அளிக்கிறது   மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
x
தினத்தந்தி 3 July 2020 1:11 AM GMT (Updated: 3 July 2020 1:11 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மதுரை, 

சாத்தான்குளம் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த வழக்கை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் ஈடுபட்ட கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனிடம் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக இடமாற்றம் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுக்கும் வரை நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. அனில்குமார் விசாரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்

இந்தநிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தாமரைக்கண்ணன் மற்றும் மனநல நிபுணர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானார்கள்.

சி.பி.சி.ஐ.டி. சார்பில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி ஜெயில் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது. ஏட்டு ரேவதி உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது கொலைவழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.

மன அழுத்தம்

பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தாமரைக்கண்ணன், “போலீசாரின் உடல்-மனநலம் பேணுவதற்கு ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட அளவில் போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு போலீஸ்காரரும் மனதளவில் கண்காணிக்கப்படுகிறார்” என்றார்.

இதையடுத்து மனநலம் மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் சேகர் ஆஜராகி, “நாடு முழுவதும் போலீஸ்காரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 10.6 சதவீதம் பேர் பொது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 சதவீதம் பேர் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக, போலீசாரின் நல்வாழ்வு திட்டப்பயிற்சி தடைபட்டுள்ளது. விரைவில் அனைத்து போலீசாருக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

நீதிபதிகள் பாராட்டு

விசாரணை முடிவில் நீதிபதிகள், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை 24 மணி நேரத்தில் கைது செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொதுமக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இதேபோல் அனைத்து வழக்குகளிலும் செயல்பட வேண்டும். ஒருசிலரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த துறையையும் எடை போடக்கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எதற்காக அடிக்கிறான்? இவ்வாறு நடந்து கொள்வது இயல்புக்கு மாறானது. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு இனிமேல் நடக்க கூடாது” என்றனர்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமானவர்களை தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவது, நீதிமன்ற காவலுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாக கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story