திருவாரூரில் 4,093 குவிண்டால் பருத்தி ரூ.1¾ கோடிக்கு ஏலம் அதிகபட்சமாக ரூ.5,550-க்கு விலை போனது


திருவாரூரில் 4,093 குவிண்டால் பருத்தி ரூ.1¾ கோடிக்கு ஏலம் அதிகபட்சமாக ரூ.5,550-க்கு விலை போனது
x
தினத்தந்தி 3 July 2020 4:22 AM GMT (Updated: 3 July 2020 4:22 AM GMT)

திருவாரூரில் 4,093 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 82 லட்சத்துக்கு ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5,550-க்கு விலை போனது.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் 8,029 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தியை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

திருவாரூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 3,336 லாட்டுகளில் (மூட்டை) பருத்தியை விவசாயிகள் ஏலத்துக்கு வைத்திருந்தனர். இந்திய பருத்தி கழகம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனர்.

அதிகபட்ச விலை

அவர்கள் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் வித்யா, கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5,550-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3,509-க்கும், சராசரியாக ரூ.4,453-க்கும் விலை போனது. மொத்தம் 4,093 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 82 லட்சத்துக்கு ஏலம் போனது.

நன்னிலம்

நன்னிலம் அருகே பூந்தோட்டம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பருத்தி குடோன் மூங்கில்குடி கிராமத்தில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய பருத்தி கழகத்தினர் மற்றும் கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் வித்யா, பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.5,550-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக 3,350-க்கு ஏலம் போனது.

Next Story