சேலத்தில் வேகமெடுக்கிறது: 92 பேருக்கு கொரோனா தொற்று - பொதுமக்கள் பீதி


சேலத்தில் வேகமெடுக்கிறது: 92 பேருக்கு கொரோனா தொற்று - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 9 July 2020 10:44 PM GMT (Updated: 9 July 2020 10:44 PM GMT)

சேலத்தில் நேற்று மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வேகமாக கொரோனா பரவுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 68 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 92 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 49 பேர், நங்கவள்ளியில் 8 பேர், கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு பகுதிகளில் 5 பேர், ஆத்தூரில் 4 பேர், வீரபாண்டி, வாழப்பாடி, ஓமலூர், தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மகுடஞ்சாவடி, காரிப்பட்டி, கொளத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், மேச்சேரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரூரில் சேலம் வந்த ஒருவர், மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த 4 பேர், கர்நாடகம், ஆந்திராவில் இருந்து சேலம் வந்த தலா ஒருவர் மற்றும் கத்தாரில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,502 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 33 பேர் குணமடைந்ததால், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story