மார்க்கெட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைப்பு


மார்க்கெட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைப்பு
x
தினத்தந்தி 12 July 2020 1:16 AM GMT (Updated: 12 July 2020 1:16 AM GMT)

மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்புற சமுதாய நல மையத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 81 மார்க்கெட் பகுதிகளில் ‘சந்தை ஒழுங்குபடுத்துதல் குழு’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கோட்ட உதவி என்ஜினீயர் தலைமையில், இன்ஸ்பெக்டர், சுகாதார அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட மார்க்கெட் நிர்வாகிகளை உள்ளடக்கிய இந்த குழு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் பணிகள் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும் அனைத்து கடைகளிலும் பணியாளர்கள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வருதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தலை கண்காணிக்க வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மார்க்கெட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அருகில் உள்ள போலீஸ்நிலையம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 7 லட்சம் பேரை தனிமைப்படுத்தி உள்ளோம். இதில் 2.45 லட்சம் பேர் 14 நாட்கள் தனிமை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, நகர மருத்துவ அலுவலர் ஹேமலதா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story