பெண்ணிடம் பேசிய தகராறில் வாலிபர் அடித்துக் கொலை


பெண்ணிடம் பேசிய தகராறில் வாலிபர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 12 July 2020 7:39 AM IST (Updated: 12 July 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே பெண்ணிடம் பேசிய தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள தாட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வடிவேல் (வயது 30). இவர் கடந்த 9-ந்தேதி அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த வேலு, சதீஷ், சங்கர் ஆகிய 3 பேரும், அப்பெண்ணுக்கு ஆதரவாக அன்று இரவு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த வடிவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வடிவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த 3 பேரும் சேர்ந்து, படுகாயமடைந்த வடிவேலை ஒரு வாடகை காரில் ஏற்றி, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களுடன் வடிவேலின் தாயார் செல்லம்மாளும் சென்றார். அவரிடம், அந்த 3 பேரும், வடிவேல் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார் என்று மருத்துவமனையில் கூறினால் தான், சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள் என்று கூறியுள்ளனர். அவ்வாறே செல்லம்மாளும் மருத்துவமனையில் கூறியதால், வடிவேல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது விசாரணைக்கு வந்த குளித்தலை போலீசாரிடமும் அதே காரணத்தையே செல்லம்மாள் கூறியுள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வேலு, சதீஷ், சங்கர் ஆகிய 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், வடிவேல் தகராறு செய்த அந்த பெண்ணின் தந்தை போலீஸ்காரர் எனக்கூறப்படுகிறது. இதனால் அவரது பெயரை வழக்கில் சேர்க்கும் வரை, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வடிவேலின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனக்கூறி, அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story