திருப்பூரில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி டிரைவர் படுகொலை


திருப்பூரில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி டிரைவர் படுகொலை
x
தினத்தந்தி 13 July 2020 4:52 AM IST (Updated: 13 July 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கார் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 32). கார் டிரைவர். இவரது மனைவி மருதவடிவு. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேச்சிமுத்து குடும்பத்துடன் திருப்பூர் நாச்சிபாளையத்திற்கு குடிவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதவடிவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி, அவருடைய செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை முயன்றும் அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் கணவருக்கு என்ன ஆனதோ? என்று பயந்த, மனைவி அருகில் உள்ளவர்கள் உதவியுடன், கணவரை தேடினார்.

இதற்கிடையே திருப்பூர்-மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் நகரில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சாலையில், 30 வயது மதிக்க தக்க ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாகவும், அவரின் உடல் அருகே பட்டாக்கத்தி மற்றும் அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த பகுதி பொதுமக்கள் திருப்பூர் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் இருந்த செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டபோது கொலை செய்யப்பட்டவர் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பேச்சுமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கிடந்த அரிவாள், பட்டாக்கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர். பேச்சுமுத்துவை பின் தொடர்ந்து வந்த ஆசாமிகள், அவரை அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டி படுகொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் பேச்சிமுத்து மீது பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு இருப்பதும், இந்த நிலையில் அவர் குடியிருந்த பகுதியில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக அவருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் முன்விரோதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story