வளைவில் திரும்பும் போது விபத்து: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் சாவு
சாலையின் வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை,
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த காட்டுப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 35). இவர் சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி முகாமில் சிறப்பு போலீசாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (வயது 30) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.திருவள்ளூரை அடுத்த இருளஞ்சேரி சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் பலமாக மோதியது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளங்கோவனுக்கு, தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் அவரை பின்தொடர்ந்து மப்பேடு நோக்கி வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் இளங்கோவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னேரி, வள்ளூர் கிராமத்தை சேர்ந்த வீரன் (48), அவரது நண்பரான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வேலாயுதம் (38) ஆகிய 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்தை நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் காயம் அடைந்த வீரன், வேலாயுதம் ஆகியோர்களை மீட்டு, சென்னை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான போலீஸ்காரர் இளங்கோவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story