பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது; கொரோனா பாதிப்பால் முதியவர் சாவு


பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது; கொரோனா பாதிப்பால் முதியவர் சாவு
x
தினத்தந்தி 13 July 2020 10:59 PM GMT (Updated: 13 July 2020 10:59 PM GMT)

கொரோனா பாதிப்பால் உடுமலையை சேர்ந்த முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 10 நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த வாரம் 3 ஆயிரத்தை நெருங்கி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது 4 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது.

அதன்படி நேற்று மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரும் பலியாகியுள்ளார்.

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்துள்ளோம். இவர்கள் கணபதிபாளையம் கந்தசாமி தோட்டத்தை சேர்ந்த 26 வயது ஆண், கொங்குமெயின்ரோடு ரங்கநாதபுரத்தை சேர்ந்த 50 வயது ஆண், வெள்ளியங்காடு முத்தையன்கோவில் லே அவுட்டை சேர்ந்த 38 வயது பெண், 41 வயது ஆண், அவினாசி பெருமாள் கோவில்தெருவை சேர்ந்த 31 வயது ஆண், சிறுபூலுவப்பட்டி அமர்ஜோதி கார்டனை சேர்ந்த 30 வயது ஆண், போயம்பாளையம் சக்திநகரை சேர்ந்த 35 வயது ஆண், திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்த 42 வயது பெண், யுனிவர்செல் ரோட்டை சேர்ந்த 27 வயது பெண், பெரியார்காலனி சாமிநாதபுரத்தை சேர்ந்த 28 வயது பெண், மண்ணரை ரோஜாநகரை சேர்ந்த 33 வயது ஆண், கோட்டைகருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த 58 வயது ஆண் ஆகிய 12 பேர் ஆவர்.

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 63 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 13 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story