மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொரோனா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது


மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொரோனா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது
x
தினத்தந்தி 14 July 2020 12:12 AM GMT (Updated: 14 July 2020 12:12 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

திண்டுக்கல்,

வாலிபர்கள், முதியவர்கள் உள்பட நேற்று முன்தினம் வரை மொத்தம் 38 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நத்தம் தாலுகாவை சேர்ந்த 52 வயது பெண்ணும் இறந்தார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 39 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது.

இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருதயம், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். இதில் பலர் கொரோனா தொற்று இருப்பது தெரியும் முன்பே இறந்து விட்டது மற்றொரு வேதனை.

அத்தகைய நபர்கள் பெரும்பாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர். சளி, இருமல் போன்றவற்றை சாதாரணமாக நினைத்து வீட்டிலேயே மருத்துவம் பார்த்து விட்டு இறுதியில் நோய் முற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அதிலும் பலர் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.

இதற்கு நோய் முற்றி இறுதிகட்ட நிலையில் மருத்துவமனைக்கு வருவதே காரணம். எனவே, இருதயம், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சளி, தொடர் இருமல் ஏற்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறினர். 

Next Story