கொரோனா பரவலை தடுக்க தேனி நகரில் முழு கடையடைப்பு; சாலையில் வாகன நெரிசலால் அச்சம்


கொரோனா பரவலை தடுக்க தேனி நகரில் முழு கடையடைப்பு; சாலையில் வாகன நெரிசலால் அச்சம்
x
தினத்தந்தி 16 July 2020 8:43 AM IST (Updated: 16 July 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

தேனி நகரில் கொரோனா பரவலை தடுக்க வியாபாரிகள் முழுமையாக கடைகளை அடைத்த நிலையிலும், சாலையில் வாகன நெரிசல் குறையாததால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தேனி,

கொரோனா வைரஸ் தாக்கம் தேனியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் பல்வேறு வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் முழுமையாக கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டது. வியாபாரிகள் சங்கங்கள் இருதரப்பாக நடத்திய கூட்டத்தில், ஒரு தரப்பு சார்பில் நேற்று முன்தினம் முதல் வருகிற 26-ந்தேதி வரையும், மற்றொரு தரப்பு சார்பில் நேற்று முதல் வருகிற 22-ந்தேதி வரையும் கடைகளை முழுமையாக அடைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், தேனியில் உள்ள கடை வீதிகளில் நேற்று முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

நடவடிக்கை தொய்வு

மருந்துக்கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்ட போதிலும், நகரில் நெரிசல் குறையவில்லை. பகல் நேரங்களில் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் சுற்றித் திரிந்தும், ஆங்காங்கே நின்று சைக்கிளில் விற்பனை செய்த டீ, காபியை கூட்டம், கூட்டமாக நின்று பருகிக் கொண்டும் இருந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில், அவற்றின் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு துறை அலுவலர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்ட தலைநகரான தேனியில் தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டதால் அங்கு பல்வேறு பகுதிகளில் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தேனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story