கோவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


கோவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 16 July 2020 4:19 AM GMT (Updated: 16 July 2020 4:19 AM GMT)

கோவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவை கரும்புக்கடை சாரமேடு பிலால் நகர் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் கடந்த 11-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படுபவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் பாதுகாப்புடன் சுற்றப்பட்டு, உறவினர்களிடம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் தகனம்

கோவை வடவள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கடந்த 13-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனை கருத்தில் கொண்டு அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று மாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பாதுகாப்பாக சுற்றப்பட்டு உறவினரிடம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவையில் தகனம் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 13-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வரும் வரை அவர் அங்கு உள்ள தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இவரது இறப்பு பதிவு கோவையில் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெறாது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 பெண்கள், 15 ஆண்கள் என்று மொத்தம் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மூதாட்டி உள்பட 2 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 21-ஆக உயர்ந்து உள்ளது.

Next Story