கோவை கலெக்டருக்கு கொரோனா தொற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை


கோவை கலெக்டருக்கு கொரோனா தொற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 16 July 2020 4:28 AM GMT (Updated: 16 July 2020 4:28 AM GMT)

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டராக இருப்பவர் ராஜாமணி. இவருக்கு கடந்த 13-ந் தேதி இரவு லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் மறுநாள் காலை கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சளி மாதிரிகளை கொடுத்தார். அவை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அதன் முடிவுகள் நேற்றுக்காலை வெளிவந்தது. இதில் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி நேற்றுக்காலை 9 மணியளவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொற்று ஏற்பட்டது எப்படி?

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகளை கலெக்டர் ராஜாமணி அடிக்கடி மேற்கொண்டு வந்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், காய்கறி மார்க்கெட், சோதனைச்சாவடிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அதன் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் பொதுமக்களும் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர். எனவே அவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

அறை மூடப்பட்டது

கலெக்டருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறை கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதுபோன்று அவரது அறைக்கு செல்லும் வராண்டா முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டன. பின்னர் அவருடைய அறை மூடப்பட்டது.

கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடைய டிரைவர், உதவியாளர், நேர்முக உதவியாளர் (பொது), முதல் தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் உள்பட 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதன் முடிவு நாளை (இன்று) தெரியவரும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டரை அடிக்கடி சந்திக்கும் அரசு அதிகாரிகளான மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி திட்ட அதிகாரி, செய்தி தொடர்பு அதிகாரி, நேர்முக உதவியாளர் (பொது) என கலெக்டருடன் நேரடி தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகளை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story